திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளை, பொதுப்பணித்துறையினரே கட்டுமான பணிக்காக ஒப்பந்ததார்களிடம் விற்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த போது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மழைநீரால் சேதமடைந்தன. பெரும்பாலான இடங்களில் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் மழைபெய்தால் சமாளிப்பதற்கு முன்னெச்சரிக்கை மீட்பு நடவடிக்கைக்காக மணல் மூட்டைகள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் வடகிழக்குப் பருவமழை ஓய்ந்துவிட்டது. இருப்பினும் அதற்காக கொண்டுவரப்பட்ட மணல் மூட்டைகள், மழைக்காலத்தில் ஏரி, குளம், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டால், அதனை தற்காலிகமாக சரிசெய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூரில் பருவமழை பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளை, பொதுப்பணித்துறையினரே கட்டுமான பணிக்காக ஒப்பந்ததார்களிடம் விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பேரிடர் காலத்தில் பயன்படுத்த வேண்டிய மணல் மூட்டைகள், பொதுப்பணித்துறையினரே விற்பதா? என வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடரபாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.