திருவள்ளூரில் பழைய பொருள்கள் விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
திருவள்ளூர் அருகே ஈக்காடு பகுதயில்; ஜனார்த்தனன் என்பவர் பழைய பொருள் விற்பனை (காயலான்) கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இதனைக் கண்ட கடையின் காவலாளிகள் தீயை அணைக்க முற்பட்டுள்ளனர். ஆனால் தீ மள மளவென கடை முழுவதும் பற்றி எரியத் தொடங்கியதால் புல்லரம்பாக்கம் காவல் துறையினருக்கும் திருவள்ளூர் மற்றும் திருவூர் தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை போராடி அனைத்தனர். இந்த தீ விபத்தினால் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கடையின் உரிமையாளர் ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடையின் கூரை மேலே குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்லும் மின்சார வயர்கள் தீயில் எரிந்து துண்டிக்கப்பட்டதால், பூண்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட 25 கிராமங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து புல்லரம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் யாராவது தீ வைத்தனரா அல்லது மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.