செய்தியாளர்: நரேஷ்
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே எஸ்.வி.ஜி.புரம் மலைக்கு அருகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், கூடவே இலவச வீட்டு மனைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் பயனாளிகள் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியேறவில்லை எனக் கூறப்படுகிறது. அப்படியே காலி மனைகளாக விட்டுள்ளனர் பயனாளிகள்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர் சார்பில் அந்த இடத்தில், “இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்ட இந்த இடம் அரசுக்கு சொந்தமானது. இந்த இடத்தில் யாரும் வீடுகள் கட்டக்கூடாது. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. (பொதுவாக வீட்டுமனை ஒதுக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்குள் அங்கு பயனாளிகள் குடிபெற வேண்டும் என்பது விதியாக உள்ளது. அப்படி குடியேறாதபட்சத்தில், அரசு அந்த இடத்தை திரும்பப்பெறும் எனக் கூறப்படுகிறது)
இந்நிலையில் அரசு தரப்பில் போர்டு வைக்கப்பட்ட பின்னர், வீட்டுமனை பட்டா பெற்றுள்ள (20 ஆண்டுகளுக்கு முன்) பயனாளிகள் சிலர் கூரை மற்றும் சிமெண்ட் ஷீட் வீடுகள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தாங்கள் அந்த இடத்தில் தொடர்ந்து வீடு கட்டிக்கொள்ள அனுமதி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர், ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ், ஆர்.கே.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் எஸ்.வி.ஜி.புரத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.
பின் ஆர்.கே.பேட்டை தாசில்தார் விஜயகுமார் தலைமையில் வருவாய்த் துறையினர் 6 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அனுமதியின்றி அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீடுகள் கட்டி வரும் பயனாளிகள் கதறி அழுது தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்திய சம்பவம் ஆர்.கே.பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.