திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் இரண்டு கல்வியாண்டு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில், கல்லூரிக்குள் நுழைந்த மர்ம கும்பல் மாணவர்களை கத்தி முதலிய பொருட்களால் தாக்கியதில் 2 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கும், இறுதி ஆண்டு மாணவர்களுக்குமிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மோதல் காரணமாக, மீண்டும் இன்று கல்லூரி பின்புற சுவர் ஏறி குதித்த 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள் நடத்திய சரமாரி தாக்குதலில் 2 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். பெரிய பிரச்னையாக மாறாத அளவிற்கு பதற்றம் காரணமாக கல்லூரியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நடந்தது என்ன?
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ளது அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரி. இந்த கல்லூரியில் 3000 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கும், இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணி போலீசார் வந்ததும் மாணவர்கள் கலைந்து ஓடி மறைந்தனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் கல்லூரி முடிந்து மாணவர்கள் வெளியே வந்து கொண்டிருந்த போது, கல்லூரியின் பின்புற சுவர் ஏறி குதித்த 5 மர்ம நபர்கள், கையில் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்து பி.ஏ., வரலாறு முதலாமாண்டு படிக்கும் கணேஷ்குமார் மற்றும் சரவணன் ஆகிய 2 பேரையும் கை, கால், முகம் ஆகியவற்றில் பலமாக தாக்கியுள்ளனர். அப்போது சக மாணவர்கள் தடுக்கவே தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரும் மீண்டும் கல்லூரியின் பின்புற சுவர் ஏறி குதித்து தலைமறைவாகினர். பலத்த காயம் அடைந்த கணேஷ்குமார் மற்றும், சரவணன் ஆகியோர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனால் மேற்கொண்டு ஏதும் பெரிய பிரச்னை ஏற்படாதவாறு பதற்றம் காரணமாக கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுவர் ஏறி குதித்து உள்ளே வந்தவர்கள் யார் என்பது குறித்து திருத்தணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.