சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற உள்ளது. 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த வாரம் வெளியானது. 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் அதிமுக 214 இடங்களையும், திமுக 244 இடங்களையும் கைப்பற்றின. 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான பதவிகளில், அதிமுக ஆயிரத்து 781 இடங்களிலும், திமுக 2 ஆயிரத்து 99 இடங்களிலும் வெற்றி
பெற்றுள்ளன.
இந்நிலையில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதனிடையே, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, தேதி குறிப்பிடாமல் தேர்தலை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதேபோல் நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைமுகத் தேர்தலுக்கு திமுக உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே வந்துள்ளதால் தேர்தலை நடத்த முடியாத நிலை நிலவுகிறது.