புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அதிகாரிகள் மட்டத்திலான ஆய்வுக் கூட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்...
“செந்தில் பாலாஜி கைதென்பது ஒரு தலைபட்சமான, பாரபட்சமான, கூட்டாச்சி தத்துவத்திற்கு விரோதமான, பாஜக அரசின் மோசமான நடவடிக்கை. பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தலைமை செயலகத்தில் சோதனை நடத்த முடியுமா..? பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒரு நீதி, பாஜக ஆளாத மாநிலங்களுக்கு ஒரு நீதியா..?
பாஜக ஆளாதா மாநில அரசுகளை முடக்கும் நடவடிக்கைகளில் பாஜக அரசு ஈடுபடுகிறது. குறுக்கு வழியில் கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வர நினைக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருப்பதால் திமுக ஆட்சிக்கு பாஜகவினர் இடையூறு கொடுத்து வருகின்றனர். செந்தில்பாலாஜி மீதான நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல்.
ஊழல் தடுக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை பாஜக கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த போது 40 சதவீத ஊழல் ஆட்சி நடைபெற்றது. மக்களால் அந்த ஆட்சி அகற்றப்பட்டது. அப்போது சோதனை நடந்ததா? யாரையாவது கைது செய்தார்களா? பாஜக ஆளும் மாநிலத்தில் இது போன்ற நடவடிக்கை எடுக்க முடியுமா?
பாஜக அல்லது பாஜக ஆதரவு - இவை இரண்டும் இல்லாத மாநிலங்களில் ஆட்சி செய்யக்கூடிய ஆட்சியாளர்களை முடக்குகின்ற விதத்திலும் மக்கள் தேர்ந்தெடுத்தாலும் குறுக்கு வழியில் அங்கு ஆட்சியை பிடிக்கும் விதத்திலும் அல்லது அங்குள்ள ஆள்பவர்களுக்கு இடையூறு கொடுக்கும் விதத்திலும் பாஜக வேலை செய்கிறது. இது அராஜகத்திற்குறியது, ஜனநாயகத்திற்கு விரோதமானது.
அமலாக்கத்துறை போன்ற தன்னாட்சி அமைப்புகள் தன்னாட்சியாக செயல்படவில்லை. அப்படி செயல்பட்டிருந்தால் பாஜக ஆளுகின்ற மாநிலத்திலும் இதுபோன்ற சோதனை நடத்திருக்கும். கைது நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கும்.
(அண்ணாமலை விவகாரம் குறித்து...)
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வேகமாக பேசுகிறாரே தவிர விவேகமாக பேசவில்லை. அண்ணாமலை கூட்டணியில் இருந்து கொண்டு அக்கட்சியினுடைய பிரதான தலைவரை பேசினால் அதிமுகவினர் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களும் பதிலுக்கு பேச தான் செய்வார்கள். அண்ணாமலை நிதானமாக செயல்படவில்லை. அண்ணாமலை என்ன அமித்ஷாவை விட பெரிய தலைவரா?
(காங்கிரஸ் மாநில தலைமை பதவி குறித்து)
காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பதவியில் இருப்போரை மாற்றுவது டெல்லி தலைமை எடுக்க வேண்டிய முடிவு. தேசிய கட்சிகளுக்கு மாநிலத்தில் நிரந்தர தலைவர்கள் என்பது இல்லை. டெல்லி தலைமை, ‘இப்போது இருப்பவரே தலைவராக இருப்பார்’ என்று அறிவித்தால் அவருடன் இணைந்து பணி செய்வேன். எனக்கு மீண்டும் அந்த வாய்ப்பை கொடுத்தால் அதனை ஏற்று, கட்சிக்காக பாடுபட தயாராக உள்ளேன். அல்லது வேறு யாருக்கும் கொடுத்தார்கள் என்றால் அவருடன் சேர்ந்து பணியாற்றவும் பாடுபடவும் தயாராக உள்ளேன்” என்று கூறினார்.