குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது தேனாம்பேட்டையில் உள்ள ஐ.ஓ.சி நிறுவத்தின் மீது கல் எரிந்ததாகக் கூறி, திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவர்களுக்கு இந்த வழக்கு தொடர்பாக இரண்டாவது முறையும் நீதிமன்றகாவல் இன்று முடிந்தது. அதையடுத்து, சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி, டைசன் மற்றும் இளமாறன் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வரும் ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி மோகனா உத்தரவிட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே அருண்குமார் ஜாமீன் பெற்றுள்ளதால் அவர் இன்று ஆஜராகவில்லை. நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, காவல்துறையினரின் ஞாயமான கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.