கோயம்பேட்டிலிருந்து திருமழிசைக்கு மாற்றப்பட்ட காய்கறிச் சந்தையை முதல்வர் பழனிசாமி நாளை ஆய்வு செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்ற மாவட்டங்களை விட அதிகரித்துக் காணப்படுகிறது. இதனிடையே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் சில்லறை வியாபாரிகள் உட்படப் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த 5 ஆம் தேதி சந்தை மூடப்பட்டது.
இதனையடுத்து இச்சந்தை திருமழிசைக்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்குப் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வந்தன. அங்கு உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதி மன்றமும் கூறியது.
இந்நிலையில் திருமழிசைக்கு மாற்றப்பட்ட காய்கறி சந்தையின் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் நாளை மாலை 4.30 மணிக்கு அங்குச் செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது