ரஜினியை பாஜக பின்னால் இருந்து இயக்குகிறதா என்ற அச்சம் உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறுகையில் “கடந்த 10 ஆண்டுகளாக வருவார் என காத்துக்கிடந்த நிலையில் தற்போது துணிவான ஒரு முடிவை எடுத்துள்ளார். அண்மையில் கூட அவர் உடல்நலம் கருதி அரசியலுக்கு வரமாட்டார் என செய்திகள் உலாவின. அப்போது உடல்நலம் முக்கியம் என்று கூறினேன். ஆனால் தற்போது அவர் அரசியலுக்கு வருகிறேன் என எடுத்த முடிவுக்கு வரவேற்பு தெரிவிக்கிறேன்.
மிக குறுகிய காலத்தில் கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்து ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த முடியும் என நினைப்பது அவரின் அதீத நம்பிக்கையை காட்டுகிறது. தமிழகத்தை பொருத்தவரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் தொழில்நுட்பம் என்பது பெரிதாக கிடையாது. சினிமா கவர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்ட காலம் அது.
தற்போதைய காலத்தில் சினிமா கவர்ச்சி அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் பார்க்கவில்லை. அவரை எந்த அளவிற்கு தமிழக மக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆன்மீகம் என்பது ஜாதி மதத்துடன் தொடர்புடையது. ஆன்மீகம் வேறு; அரசியல் வேறு: இரண்டையும் ஒன்றாக இணைப்பது குழப்பமான நிலைப்பாடு.
ஆன்மீகத்தில் அரசியலை கலப்பது சுயநலம் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாக் கட்சியிலும் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கிறார்கள். பாஜக அதை செய்ததால் தான் இன்று இந்து மதம் இந்த அளவிற்கு விமர்சனத்திற்கு உள்ளாகிறது. ஆன்மீகத்திற்கு ரஜினி என்ன வரையறை வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆன்மீகம் என்றால் சாதி, மதத்துடன் பின்னி பிணைந்துதான் இங்கு பார்க்கப்படுகிறது. அதை பிரித்து தனியாக அவர் எந்த அளவிற்கு கொண்டு செல்ல உள்ளார் என்பது தெரியவில்லை. நேரடியான பாஜக தமிழகத்தில் நிலைக்க முடியவில்லை. ஆனால் ரஜினியை பின்னால் இருந்து இயக்குகிறார்களோ என்ற சந்தேகம் எழுப்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.