“ஆர்.எஸ்.எஸ் பிரதிநிதியாக செயல்படுகிறார் தமிழக தமிழக ஆளுநர்” - விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

'சங் பரிவார அமைப்புகள் நமது தமிழ்நாடு முதல்வருக்கே சவால் விடுகிறார்கள்' என திருமாவளவன் பேசினார்.
திருமாவளவன்
திருமாவளவன்Facebook
Published on

திராவிட நட்புக் கழகம் ஒருங்கிணைத்து நடத்திய மத நல்லிணக்க மாநாடு வேலூர் கோட்டை பூங்கா அருகே நேற்று நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், திராவிட நட்புக் கழக நிறுவனர் சுப.வீரபாண்டியன், ஒருங்கிணைப்பாளர் சிங்கராயர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர் சத்யராஜ், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் உள்ளிட்டோரும், கருத்துரையாளர்களாக அனைத்து மதத்தை சார்ந்த மத குருமார்களும் கலந்து கொண்டனர்.

திருமாவளவன்
திருமாவளவன்

இதில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், ''தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த மத நல்லிணக்க மாநாடு நடைபெறுகிறது. ஒரே மேடையில் அனைத்து மதத்தினரையும் அமைத்ததை பாராட்டுகிறோம். சங் பரிவார அமைப்புகள் நமது தமிழ்நாடு முதல்வருக்கே சவால் விடுகிறார்கள். ஆளுநர் என்பதை மறந்து ஆர்.எஸ்.எஸ் பிரதிநிதியாக செயல்படுகிறார் தமிழக ஆளுநர். திமுக என்றால் சமூக நீதி கட்சி, பெரியார் அரசியல். அதனால் தான் வீழ்த்த திட்டம் தீட்டி வருகிறார்கள். யாதும் ஊரே யாவரும் கேளீர் என கூறி பேசினால் தமிழன் ஏமாந்துவிடுவான் என நினைக்கிறார்கள்.

ராமன் உயிரோடு இருந்திருந்தால் என் பெயரை ஏன் அரசியலுக்காக பயன்படுத்துகிறாய் என கோபப்பட்டு இருப்பான். அவர் இல்லை என்றால் ராமனின் பக்கதர்கள் கோபப்பட வேண்டாமா? கட்டாயப்படுத்தி யாரையும் காதலிக்க வைக்கவும் முடியாது, மதம் மாற்றவும் முடியாது. ஆனால் இவர்கள் இவற்றை அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள்.

திமுக பாஜகவோடு கூட்டணி வைத்ததாக சில அறிவு ஜீவிகள் பேசுவார்கள். அவர்களுக்கு ஒன்றைக் கூறிக் கொள்கிறேன். திமுக பாஜகவோடு கூட்டு வைத்த போது கருணாநிதி 3 விதிகளோடு தான் கூட்டணி வைத்தார். பொது சிவில் சட்டம், பாபர் மசூதி, காஷ்மீர் பிரச்சனைகளில் கையெழுத்து இடக்கூடாது என்ற நிபந்தனையோடு கூட்டணி வைத்தார். ஆனால் இன்றைக்கு இதில் இரண்டை நிறைவேற்றிவிட்டார்கள். 3-வதாக இருக்கும் பொது சிவில் சட்டத்தை வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற உள்ளார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு முன் கிளைமாக்ஸ் ஆக உலக சாதனையாக ராமர் கோவிலை திறக்க உள்ளார்கள். அம்பேத்கர் கூறிய பொது சிவில் சட்டத்தின் நோக்கம் வேறு. இப்போது இவர்கள் கூறும் பொது சிவில் சட்டம் வேறு.

திருமாவளவன்
திருமாவளவன்

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் வாழ்வா சாவா என்கிற மிக ஆபத்தான தேர்தல். அதில் இவர்கள் வென்று விட்டால் அதிபர் ஆட்சியை கொண்டு வந்துவிடுவார்கள். தேர்தலே இல்லாத சூழலை உருவாக்கி விடுவார்கள். தோழமையோடு வேண்டுகோள் விடுக்கிறேன். இசுலாமியர்களும், கிருஸ்தவர்களும் 100% வாக்களிக்க வர வேண்டும். குறிப்பாக பெண்கள். திமுக கூட்டணி 40/40 வெற்றி பெற வேண்டும்'' என திருமாவளவன் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com