டெல்லி கலவரத்திற்குப் பொறுப்பேற்று மோடியும் அமித் ஷாவும் பதவி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதை அடுத்து, டெல்லியின் வடகிழக்குப் பகுதி போர்க்களமாக மாறியது. இந்த வன்முறையில் 39 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் திருமாவளவன் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “டில்லி கலவரம் உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அமித்ஷா பதவி விலக வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “டில்லியில் நடந்தது போன்று சென்னையிலும் நடைபெறும் என ஹெச்.ராஜா கூறியுள்ளார். கலவரத்தை தூண்டும் விதத்தில் பேசிய அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். ரஜினி மத்திய அரசுக்கு எதிராக முதன்முதலில் கருத்து தெரிவித்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது.
டில்லி கலவரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரஜினி, உளவுத்துறை தோல்வி என்று கூறியிருப்பது அதில் தொடர்புடைய பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை குறிப்பிடுவதாகவே தெரிகிறது. டில்லி கலவரம் தொடர்பாக நீதிமன்ற நீதிபதி கொண்ட நீதி விசாரணை நடத்த வேண்டும். சிறுபான்மை மக்களால் ஆட்சிக்கு வந்த அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி கலவரத்தில் 40பேர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று பார்க்கவோ, ஆறுதலோ சொல்லவில்லை. அவர் அமைதியாக இருப்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.