கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் கூகுள் மேப்பை பார்த்தவாறு பயணம் செய்ததால், கழிவு நீர் வாய்க்காலில் கார் இறங்கி விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருக்கோவிலூர் அருகே உள்ள ஸ்ரீ ஞானானந்தகிரி தபோவனம் மடத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து நேற்று இரவு கூகுள் மேப் உதவியுடன் கீழையூர் பகுதியில் உள்ள வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் தபோவனம் மடத்திற்கு செல்ல கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், கோவிலில் இருந்து நேராக சென்று வலப்புறம் உள்ள பாலத்தில் திரும்பி செல்ல கூகுள் மேப் காட்டியுள்ளது. ஆனால் அதனை சரியாக புரிந்து கொள்ளாத ஸ்ரீராம் மெயின் ரோட்டில் செல்வதற்கு பதிலாக தென்பெண்ணை ஆற்றுக்கு செல்லும் குறுகிய சாலையில் கூகுள் மேப்பை பார்த்தவாரே சென்றுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக குறுகிய சாலையில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் கார் இறங்கி உள்ளது.
இந்த சம்பவத்தில் காரில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசத்தால் தப்பினர். கழிவு நீர் வாய்க்காலில் இறங்கிய கார், ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர், கிரேன் உதயோடு மீட்கப்பட்டது.