திருச்செந்தூர் முருகன் கோயில் - வி.ஐ.பி. தரிசனம் தொடர்பான உத்தரவுக்கு இடைக்காலத் தடை

திருச்செந்தூர் முருகன் கோயில் - வி.ஐ.பி. தரிசனம் தொடர்பான உத்தரவுக்கு இடைக்காலத் தடை
திருச்செந்தூர் முருகன் கோயில் - வி.ஐ.பி. தரிசனம் தொடர்பான உத்தரவுக்கு இடைக்காலத் தடை
Published on

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கூடுதல் பணியாளர்கள் நியமனம், காவல்துறை பாதுகாப்பு, விஐபி தரிசனம் குறித்து தனி நீதிபதி அளித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருசுந்தரராக பணியாற்றும் சீதாராமன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதி வழக்கு சம்பந்தமாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். கோயிலில் கூட்டத்தை கட்டுப்படுத்த பணியாளர்களை அதிகரிப்பது, விஐபி தரிசனங்களை முறைபடுத்துவது, அடிப்படை வசதிகள் செய்து தருவது போன்ற பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் சுதந்திர பரிபாலனா ஸ்தலத்தார் சபை தலைவர் குமார் ஐயர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், இந்த வழக்கு சேவை சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இதனை பொதுநலன் வழக்காக விசாரணை செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவை அனைத்தும் பொது மக்கள் நலன் சார்ந்தது, அனைவரும் சரிசமமாக சாமி தரிசனம் செய்வதற்காக இந்த வழக்கை பொதுநல வழக்காக விசாரணை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com