செய்தியாளர்: ஐஷ்வர்யா
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சாலை உலியம்பாளையம் அடுத்த குப்புசாமி வீதியில் வசிப்பவர் ஞானசுந்தரம் என்ற குமார் (44). கொசு வலை தயாரித்து விற்பனை செய்து வரும் இவர், விடுமுறை தினம் என்பதால் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.
இந்நிலையில், இன்று காலை வீட்டிற்கு திரும்பிய அவர், வீட்டை திறந்து பார்த்துள்ளார். அப்போது, படுக்கை அறையில் இருந்த பீரோவில் அவர் வைத்திருந்த நகை பணம் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் வீட்டின் பின்பகுதியில் ஓடுகள் பிரிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இந்த சம்பவம் தொடர்பாக தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் வடிவேல் குமார் வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டார். இதில், 22 பவுன் தங்க நகை, ரூ.3 லட்சம் பணம் ஆகியவை கொள்ளை போனது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மேலும், நகை பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையன் வீட்டின் நடுவே மலம் கழித்துச் சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இது வீட்டு உரிமையாளரை மட்டுமன்றி, செய்தியை கேட்போரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.