ஏழைகளை ஏழையாக வைத்திருந்து 5 வருடங்களுக்கு குத்தகை எடுக்கிறார்கள் - கமல்ஹாசன்

ஏழைகளை ஏழையாக வைத்திருந்து 5 வருடங்களுக்கு குத்தகை எடுக்கிறார்கள் - கமல்ஹாசன்
ஏழைகளை ஏழையாக வைத்திருந்து 5 வருடங்களுக்கு குத்தகை எடுக்கிறார்கள் - கமல்ஹாசன்
Published on

அவிநாசியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏழைகளை ஏழையாக வைத்திருந்து 5 வருடங்களுக்கு குத்தகை எடுக்கிறார்கள் என்று பேசினார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே அவர் மக்கள் மத்தியில் உரையாற்றினார். கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன், “செல்லும் இடமெல்லாம் தமிழகம் மாற்றத்திற்கு தயாராகிவிட்ட சான்று உங்கள் கர்ஜனையில் எனக்கு தெரிகிறது. இது ஒரு சினிமா நட்சத்திரத்தை பார்க்கவந்த கூட்டம் அல்ல, இது தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் கூட்டம், நேர்மையாளர்களின் கூட்டம், இங்கு யாரும் காசு கொடுத்து கூட்டிவந்த கூட்டம் அல்ல என்பதே உங்கள் நேர்மைக்கு அத்தாட்சி.

இது கட்சிகளுக்கு உள்ளான போர் அல்ல, இது நேர்மைக்கும் ஊழலுக்குமான போர். அதில் உங்களின் வாக்கு நேர்மையின் பக்கமே இருக்க வேண்டும் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. முதலையை உண்ட பாலகனை சுந்தரர் பதிகம்பாடி மீட்டார் என கேட்டிருக்கிறோம், இன்று தமிழகத்தையே விழுங்கிக் கொண்டிருக்கும் பண முதலைகளை பாடியெல்லாம் தமிழகத்தை மீட்க முடியாது.

இந்த பண முதலைகளின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டாக வேண்டும். அதில் உங்கள் உதவியும் தேவை உங்கள் ஓட்டும் தேவை. முதல் முறையாக ஓட்டு போடுபவர்கள் இன்னும் கரைபடியாத உள்ளம் கொண்டவர்கள். அவர்கள் யோசித்து சாதிப்படி ஓட்டுப்போடாமல் சாதிப்பவர்களை பார்த்து ஓட்டுப்போட வேண்டும். இது, இளைஞர்களுக்கு மட்டுமல்ல முதியவர்களுக்கும் தாய்மார்களுக்கும் அனைவருக்கும் பொருந்தும்.

ஏழையை ஏழையாகவே வைத்திருந்தால் தான் தேர்தல் நேரத்தில் அவர்களை ஐந்து வருடங்களுக்கு குத்தகைக்கு எடுக்க முடியும் என்பதால் ஏழ்மையை பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். வறுமைக்கோடு வறுமைக்கோடு என்று எல்லோரும் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். ஆனால், நாங்கள் சொல்வது செழுமைக்கோடு. உங்கள் எல்லோரையும் செழுமைக் கோட்டிற்கும் அதற்கு மேலும் கொண்டு செல்வதுதான் மக்கள் நீதி மய்யத்தின் கனவு திட்டம்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திருப்பூரில் மக்கள் வெள்ளம் புதிய எல்லைகளைத் தொடுகிறது. வெற்றி நமதே எனும் ஆர்ப்பரிப்பில் நெகிழ்கிறேன். மாற்றம் சமீபித்து விட்டதென்பதை தமிழகத்திற்கு அறிவிக்கிறது கொங்கு மண்டலத்தின் சங்க நாதம். <a href="https://t.co/pSG97DEKKw">pic.twitter.com/pSG97DEKKw</a></p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://twitter.com/ikamalhaasan/status/1348620913747521539?ref_src=twsrc%5Etfw">January 11, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இங்கு அற்புதமான வாய்ப்புகள் உள்ள சிறு நகரங்களும் பெருநகரங்களும் குண்டும் குழியுமாக எங்கு பார்த்தாலும் சாலைகளை தோண்டி வைத்திருக்கிறார்கள். இங்கு குடிநீர் விநியோகம் சரியாக இல்லை. பக்கத்து மாநிலம் பொறாமைபடும் அளவிற்கு மழை பெய்துள்ளது. ஆனால், குடிக்க தண்ணீர் இல்லை. நீர் மேலாண்மையில் பெயர் பெற்ற தமிழர்கள் இன்று பணவசூல் வேட்டையில் இறங்கிவிட்டதால் நமது பெருமையெல்லாம் கெட்டுப்போய் விட்டது.

இன்னும் மூன்று மாதத்தில் சரித்திரத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு அளிக்கப்படுகிறது. அதை நன்கு பயன்படுத்துங்கள், தமிழகத்தை சீரமைப்போம், தமிழகம் தலைநிமிரட்டும். அதைச் செய்ய நீங்கள் முன்வரவேண்டும். நாளை நமதாகும் என்று அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com