"எது தமிழ்? எது சமஸ்கிருதம்? என்று தெரியாத அளவிற்கு மூளை சலவை செய்யப்பட்டுள்ளது" – நடிகர் சத்யராஜ்
ஈரோடு மாவட்டம் திண்டலில் உள்ள தனியார் கல்லூரியில் ரோட்டரி சங்கம் சார்பில் இதயம் காப்போம் பேருந்து துவக்க விழா நடைபெற்றது. பொதுமக்கள் மத்தியில் இதயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மக்கள் இலவச பரிசோதனை செய்து கொள்ளவும் மற்றும் சிகிச்சை வழங்கிடும் வகையில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இதயம் காப்போம் என்ற பேருந்து உருவாக்கப்பட்டது.
பேருந்தில் மருத்துவ குழுவோடு ஊர் ஊராக சென்று பொதுமக்களுக்கு இலவசமாக இதய மருத்துவ பரிசோதனை சிகிச்சை மற்றும் மருந்து பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருதயம் மட்டுமின்றி பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றவர்களை கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படும் என்றும் குடல் நோய்களை கண்டறிய குடல் உள்நோக்கி கருவியும் அதற்கான மருத்துவர்களும், ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள லேப் வசதியும் இப்பேருந்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து துவக்க விழாவில் கலந்து கொண்ட திரைப்பட நடிகர் சத்யராஜ் ரிப்பன் வெட்டி சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியின் பேசிய அவர், வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முதல்வர் மருத்துவத்தை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சென்று வருகின்றனர். உடல் பரிசோதனை முக்கியத்துவம் குறித்து கிராம பகுதியினருக்கு தெரிவதில்லை. மக்கள் நலன் சார்ந்த பணிகள் ஈரோடு பகுதியில் இருந்து தான் ஆரம்பமாகிறது.
அதற்கு உதாரணமாக பெரியார் பிறந்த மாவட்டமாக ஈரோடு இருக்கிறது.
நமக்கே தெரியாமல் சமஸ்கிருதத்தை உள்ளே நுழைத்து விட்டார்கள். எது தமிழ்? எது சமஸ்கிருதம்? என்றே தெரியாத அளவிற்கு மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. எனது இயற்பெயர் ரங்கராஜ், சத்யராஜ் என பெயர் மாற்றினேன். ஆனால், சத்யராஜ் தமிழ் பெயர் இல்லை. மெய்யரசு தான் தூய தமிழ் பெயர். இதெல்லாம் தெரியாத அளவிற்கு சமஸ்கிருதம்” கலந்துவிட்டது என்றார்.