கடத்தூர் அருகே மாற்றுத் திறனாளிகளை மிரட்டி நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக மாற்றுத் திறனாளிகளுடன், தாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு எற்பட்டது.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜப்பன் - குப்பு தம்பதியர். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ள நிலையில்,இரண்டு ஆண், ஒரு பெண் ஆகிய மூன்று பிள்ளைகளும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் இவர்களுக்கு முன்னோர்கள் வழி சொத்து, ஒரு ஏக்கர் மேட்டு நிலம் இருந்து வருகிறது. இந்த நிலத்தில் விவசாயம் செய்து, தங்களது குடும்பத்தை நடத்தி வருகின்றனர். ஆனால், இவர்களுடைய மூன்று பிள்ளைகளும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளாக இருப்பதால், இவர்களது நிலத்தை அருகில் உள்ள உறவினர்களான சின்ராஜ், பவுனுகாசி, பவித்ரா ஆகியோர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ஆதரவின்றி உள்ள இந்த குடும்பத்தினரை அடித்துத் துன்புறுத்தி, மிரட்டியும் வருகின்றனர் வயதான தாய் மற்றும் 3 மாற்றுத் திறனாளி பிள்ளைகளை வைத்துள்ள இந்த குடும்பத்தினருக்கு ஆதரவாக யாரும் இல்லாததால் அருகில் உள்ளவர்கள் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறை மற்றும் வருவாய்த் துறை என பல்வேறு இடங்களில் புகார் மனு அளித்தும் இதுவரை அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து தங்களது விவசாய நில பகுதிகளுக்குச் சென்றால், கொலை செய்துவிடுவேன் என மிரட்டி தாக்குகிறார்கள். அதனால் அந்த நிலத்தின் பக்கம் எங்களால் செல்ல முடியவில்லை எனக் கூறி குப்பு தனது இரண்டு மாற்றுத் திறனாளி பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்து, மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலின் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதைக் கண்ட தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் அவர்களை பாதுகாப்பாக மீட்டனர். மேலும் தங்களது விவசாய நிலத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு கொடுக்காமல், ஏமாற்றி அபகரித்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதனால் தங்களது உயிருக்கு பாதுகாப்பில்லை. எனவே மாவட்ட ஆட்சியர், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் தங்கள் குடும்பத்துடன் இங்கே தற்கொலை செய்து கொள்வோம்.
மேலும் எங்கள் நிலத்தை அரசே எடுத்துக் கொள்ளட்டும் என கண்ணீர் மல்க மாற்றுத் திறனாளி பிள்ளைகளுடன், தாய் குப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நான்கு பேரையும், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுடன், தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.