காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்வதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூலி தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கண்ணன். இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு வந்த இவர் திடீரென்று உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தியதுடன் அவரது உடலில் தண்ணீர் ஊற்றினர்.
தீக்குளிக்க முயற்சித்தற்கான காரணத்தை அவரிடம் கேட்ட போது, காவல்துறையினர் அவர் மீது பொய்யான புகார் சுமத்தி வழக்குப்பதிவு செய்து அடிக்கடி காவல்நிலையம் அழைத்து செல்வதாகவும், இதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தனக்கு நியாம் வேண்டும் என்று கூறினார். இச்சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீக்குளிக்க முயற்சித்த கூலி தொழிலாளி கண்ணன் மீது ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் சூதாட்ட வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.