கொடநாடு கொலை விவகாரத்தில் அதிமுகவினர் மீது குற்றம் இல்லை என்றால், திமுக அரசு எத்தனை முறை புலனாய்வுக்கு உத்தரவிட்டாலும் அதிமுகவினர் துணிச்சலோடு எதிர் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் தெரிவித்தார்.
பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த திருமாவளவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். அவர் அளித்த பேட்டியின் விவரம்..
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற பெரியாரின் கனவை தமிழக அரசு நினைவாக்கி உள்ளது. மனிதன் நிலவில் கால் வைத்தாலும் கோயில் கருவறைக்குள் கால்வைக்க முடியாது என்கிற நிலைமை ஆயிரம் தலைமுறைகளாக நீடித்து வந்தது. அதனால்தான் அனைவரும் கோவிலுக்குள் நுழைய வேண்டுமென்ற உரிமையினை பெரியார் கேட்டுக் கொண்டிருந்தார், அதனடிப்படையில் கருணாநிதி அதை சட்டமாக்கினார். கருணாநிதியின் வழியில் ஸ்டாலின் அதனை நடைமுறை படுத்தியுள்ளார். இதனை விசிக பாராட்டி வரவேற்கிறது.
சுப்பிரமணிய சாமியை போன்றவர்கள் சமூகநீதியை விரும்பாதவர்கள். அதனால்தான் இது அவர்களுக்கு எரிச்சலை தருகிறது. கோவிலுக்குள் இந்துக்கள் மட்டுமே போவார்களே தவிர இந்துக்கள் அல்லாதவர்கள் செல்லமாட்டார்கள். இதுவே அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதன் பொருள். இந்துக்கள் முன்னேறுவதில் இவர்களுக்கு என்ன சிக்கல். இந்துக்கள் அல்லாதவர்கள் அர்ச்சகர் ஆனால் இவர்கள் கோபப்படுவது ஆத்திரப்படுவதில் நியாயம் உண்டு,
மாறாக அனைத்து இந்துக்களும் கருவறைக்குள் நுழைவதால் இவர்கள் எரிச்சல்படுகிறார்கள் என்றால் அனைத்து இந்துக்களும் சமமானவர்கள் அல்ல என்ற இவர்களது நினைப்பை ஒப்புக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். அகில இந்திய அளவில் இந்த திட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு உற்ற துணையாக இருப்போம்.
அதிமுகவினர் மீது குற்றம் இல்லை என்றால் அவர்கள் அச்சப்படத் தேவையில்லை. திமுக அரசு எத்தனை முறை புலனாய்வுக்கு உத்தர விட்டாலும் அதிமுகவினர் துணிச்சலோடு எதிர் கொள்ள வேண்டுமே தவிர வெளிநடப்பு செய்யக்கூடாது.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அகில இந்திய அளவில் எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான கணக்கெடுப்பு ஏற்கெனவே நடைபெற்று கொண்டிருக்கிறது. ஓபிசி கணக்கெடுப்பு இங்கு தேவைப்படுகிறது. எம்பிசி-யில் உள்ள 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு பத்தரை சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு பிற சமூகத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்ற விவாதம் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே பிற சமூகத்தினரின் சதவீதம் எவ்வளவு என்பதனை தெரிந்து கொள்வதற்காகத்தான் இங்கு சாதிவாரியான கணக்கெடுப்பு தேவைப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அரசு மேற்கொள்ளட்டும்.
இட ஒதுக்கீடு சாத்தியம்தான். உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள 50 சதவிகித உச்சவரம்பை நீக்கி மத்திய அரசு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.
ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்களை போர்க்கால அடிப்படையில் விரைந்து மீட்க வேண்டும் என மத்திய அரசிற்கு கோரிக்கை விடுக்கிறேன்.