மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தேவர்சிலை: போராட்டக்காரர்கள்-போலீஸ் இடையே மோதல்

மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தேவர்சிலை: போராட்டக்காரர்கள்-போலீஸ் இடையே மோதல்
மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தேவர்சிலை: போராட்டக்காரர்கள்-போலீஸ் இடையே மோதல்
Published on

மேலூர் அருகே அனுமதியின்றி புதிதாக வைக்கப்பட்ட தேவர் சிலையை அகற்றுவது தொடர்பாக, காவல்துறை மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பதற்றமான சூழல் நிலவுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வெள்ளாப்பட்டி புதூர் மந்தைதிடல் அருகே அப்பகுதியைச் சேர்ந்தவர்களால், 5 அடி உயரம் கொண்ட சிமெண்ட்டால் செய்யப்பட்ட தேவர் சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வனிதா, மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ரகுபதிராஜா மற்றும் வருவாய்த்துறையினர் சிலையை அகற்றுவது தொடர்பாக அப்பகுதி மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, ஒரு சிலர் சிலையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் காவல்துறையினருக்கும் அப்பகுதி போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கற்கள், கம்புகள், மற்றும் மிளகாய்பொடி கொண்டு திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் மேலூர் காவல்துறை ஆய்வாளர் சார்லஸ், சார்பு ஆய்வாளர்கள் பழனியப்பன், சுதன், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கார்த்திகைவள்ளி, சதுரகிரி, மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த மூன்று காவல்துறை வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு தொடர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com