திருத்தணி: பொங்கல் தொகுப்பில் பல்லி இறந்து கிடந்ததாக முறையிட்டவர் மீது வழக்குப்பதிவு

திருத்தணி: பொங்கல் தொகுப்பில் பல்லி இறந்து கிடந்ததாக முறையிட்டவர் மீது வழக்குப்பதிவு
திருத்தணி: பொங்கல் தொகுப்பில் பல்லி இறந்து கிடந்ததாக முறையிட்டவர் மீது வழக்குப்பதிவு
Published on

பொங்கல் சிறப்புத் தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில், பல்லி இருந்ததாக முதியவர் ஒருவர், நியாயவிலைக்கடை ஊழியரிடம் குற்றஞ்சாட்டியநிலையில், அவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதால், மன உளைச்சலில் இருந்த முதியவரின் மகன் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கூட்டுறவு பண்டகக் கடை எண் 2-ல், நேற்று தமிழக அரசின் பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட்டது. அதனை அந்தக் கடையின் வாடிக்கையாளர்கள் வாங்கி சென்றுள்ளனர். தோட்டக்கார மடம் தெருவை சேர்ந்த நந்தன் (65) என்ற முதியவரும் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கொண்டு, வீட்டுக்கு சென்றுள்ளார். மீண்டும் நியாய விலை கடைக்கு வந்த முதியவர் வாங்கிச் சென்ற பொங்கல் தொகுப்பில் உள்ள புளியில் பல்லி இருந்ததாக கூறி, நியாய விலைக் கடை ஊழியர் சரவணனிடம் விசாரித்துள்ளார்.

அப்போது, அந்த ஊழியர், முதியவர் நந்தனுக்கு முறையான பதில் அளிக்காமலும், அலட்சியப்படுத்தும் வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் இருந்த செய்தியாளர்கள், முதியவர் நந்தனிடம் விசாரித்தபோது கிடைத்த தகவலை அடுத்து, இந்த செய்தி ஒளிபரப்பானது. இதற்கிடையில் அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தியதாக முதியவர் நந்தன் மீது, நியாய விலைக் கடை ஊழியர் சரவணன் கொடுத்தப் புகாரின் பேரில், தவறான தகவலை பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நந்தன் மற்றும் அவரது குடும்பத்தார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று முதியவர் நந்தனின் மகன் குப்புசாமி (36), பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மருத்துவமனையில், 80 சதவிகித தீக்காயங்களுடன் சேர்க்கப்பட்ட குப்புசாமிக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*****

தற்கொலை என்பது எதற்கும் தீர்வு அல்ல.

தற்கொலை எண்ணங்கள் தோன்றினால், உடனடியாக அதற்கான உதவி எண்களை நாட தயங்க வேண்டாம் - மாநில சுகாதாரத் துறை தற்கொலை உதவி எண் - 104; சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com