தருமபுரி மாவட்டம் புலிக்கரையைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் பழனிவேல். இவர் அவருடைய மனைவி சாந்தி மற்றும் மகன் விஜய் ஆனந்த் உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒட்டப்பட்டி, அவ்வை நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் விஜய் ஆனந்த் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனது நண்பர்களான கார்த்திக் மற்றும் அருண் இருவருடன் இணைந்து குமாரபாளையம் பகுதியில் நூல் தொழில் செய்து வந்துள்ளார். ஆனால் மூவரும் இணைந்து செய்த தொழிலில் போதிய வருவாய் இல்லாத நிலை ஏற்பட்டதால், விஜய் ஆனந்த் தனது நண்பர்களிடம், தன்னுடைய பணத்தை திருப்பி கொடுக்குமாறும், தன்னை விடுவிக்குமாறும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கொடுத்த பணத்திற்கு மாதந்தோறும் வட்டி தருவதாக கார்த்திக் மற்றும் அருண் இருவரும் தெரிவித்து சமாதானம் செய்துள்ளனர். சொன்னதைபோல் தொடர்ந்து மாதம் தோறும் 25 லட்சத்திற்கான வட்டி வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக அவர்களால் முறையாக வட்டி கொடுக்கப்படமுடியாத நிலை ஏற்பட்டதாகவும், அதனால் மூவருக்கும் இடையே பிரச்சினை மூண்டதாக தெரிகிறது.
இந்நிலையில், கார்த்திக் மற்றும் அருண் இருவரும் கொடுத்த 25 லட்சம் பணத்தையும் திருப்பி கொடுக்காமல், வட்டியையும் கொடுக்காமல் ஏமாற்றியதால் விஜய் ஆனந்திற்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த சில நாட்களாக விரக்தி மற்றும் மன உளைச்சல் அதிகமாக இருந்துவந்த நிலையில், விஜய் ஆனந்தின் தந்தை பழனிவேல் அவருடைய சொந்த ஊரான புலிக்கரைக்கு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் வீட்டிலிருந்த விஜய் ஆனந்த் மற்றும் தாய் சாந்தி இருவரும், தங்களது முகத்தில் பாலித்தின் கவரை வைத்து மூடி, நைட்ரஜன் கேஸ் சிலிண்டரில் பைப் லைன் கனக்சன் மூலம் முகத்தை மூடிய பாலித்தின் கவருக்கும் நைட்ரஜனை பாய்ச்சி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தற்கொலை செய்வதற்கு முன்பு தனது தற்கொலைக்கு காரணம் கார்த்திக் மற்றும் அருண் இருவர் தான் என்றும், தன்னிடம் பெற்ற 25 லட்ச ரூபாய் பணத்தினை திருப்பிக் கொடுக்காமல், ஏமாற்றி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும், அவர்களின் செல் போன் நம்பர் உட்பட அனைத்தையும் கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கதவை அப்படியே திறந்தால், திறப்பவருக்கும் நைட்ரஜன் வாயுவால் பாதிப்பு ஏற்படும் என்பதால் “POISON GAS, NITROJAN INSIDE, PLEASE CALL POLICE, BREAK WINDOWS BEFORE” என ஒரு சார்ட்டில் எழுதி ஒட்டிவைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மாலை வீடு திரும்பிய தந்தை பழனிவேல், வீடு லைட் போடாமல் இருண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் வீட்டில் யாருமில்லாமல் எங்கு போய்விட்டார்கள் என்று தேடிப்பார்த்த பொழுது வீடு பூட்டி இருந்துள்ளது. இதனையடுத்து தன்னிடம் இருந்த மற்றொரு சாவியின் மூலம் வீட்டை திறந்து பார்த்தபோது, அறையில் சார்டில் எழுதி வைத்ததை கண்டு அதிர்ந்து போன பழனிவேல் ஒடிப்போய் ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்துள்ளார். அப்பொழுது இருவரும் அறைக்குள் முகத்தில் சிலிண்டர் கேஸ்ஸை செலுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதை கண்டு அதிர்ந்து போயுள்ளார்.
தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தநிலையில் உள்ளே சென்று பார்த்து, இருவருக்கும் முதலுதவி கொடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால் இருவரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அதியமான்கோட்டை காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்துகொண்ட அறையில் இரண்டு சிலிண்டர்கள், நைட்ரஜன் வாங்கியதற்கான பெட்டிகள், அவற்றை சிலிண்டரோடு இணைப்பதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் புதிதாக வாங்கி வைத்துள்ளனர். மேலும் ஒரு பெட்டி திறக்காமல் இருந்துள்ளது. அந்த பெட்டியின் மீது METAL CUTTER, FOR SUCIED என எழுதப்பட்டிருந்தது. இந்த பெட்டிகளைபார்க்கும் பொழுது இணையதளத்தில் வாங்கப்பட்டது போல், அதன் மீது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இரண்டு சிலிண்டர், மற்ற உபகரணங்கள், பெட்டிகள் என அனைத்தையும் காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும் கதவில் ஒட்டப்பட்டு இருந்த சார்ட், அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நைட்ரஜன் மற்றும் சிலிண்டர்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது? நேரடியாக எங்கேயும் வாங்கினார்களா அல்லது இணையதளம் மூலம் வாங்கினார்களா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அருண் மற்றும் கார்த்திக் இருவரையும் விசாரணைக்குள் கொண்டுவர காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.