சென்னைக்கு ரயில் மூலமாக தண்ணீர் கொண்டு வர வேண்டிய தேவை தற்போது இல்லை என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையை சுற்றியுள்ள முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இருப்பினும் பூண்டி ஏரியில் மட்டும் தற்போது 48 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. சென்னையின் ஒருநாள் குடிநீர் தேவை 1200 மில்லியன் லிட்டராக உள்ள நிலையில், குடிநீர் பிரச்னையை தீர்க்க சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக,நெம்மேலி, மீஞ்சூர் பகுதிகளில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திலிருந்து நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
இதுதவிர, கல்குவாரிகளிலிருந்து சுத்திகரிப்பு செய்து 30 மில்லியன் லிட்டரும், வீராணம் ஏரியிலிருந்து 230 மில்லியன் லிட்டரும் சென்னை குடிநீருக்கு பயன்படுத்தப்படுகிறது. சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு மாற்று வழிகளை மேற்கொண்டு வரும் இந்த சூழலில் வெளியிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர அவசியமில்லை என சென்னை குடிநீர் வாரியம் மேலான் இயக்குனர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை அருகே உள்ள விவசாயக் கிணறுகளிலிருந்தும் தண்ணீர் பெறப்படுவதால் சென்னை மக்களுக்கு நாளொன்றுக்கு 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் குடிநீர் வாரியம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.