மக்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு எட்டு வழிச்சாலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு பழனிசாமி அரசு முனையக் கூடாது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சேலம் – சென்னை 8 வழிச்சாலை தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கும், சட்டப்பேரவையிலேயே ‘8 வழிச்சாலையை எதிர்க்கவில்லை’ என்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் வேண்டுமானால் இத்தீர்ப்பு மகிழ்ச்சி தரலாம்.
ஆனால், மக்களின் உணர்வுகளுக்கும், கண்ணீருக்கும் நீதி கிடைக்காமல் போயிருப்பது வேதனை அளிக்கிறது. இத்தனைக்கும் பிறகு துளியாவது மனச்சாட்சி இருந்தால், 8 வழிச்சாலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு பழனிசாமி அரசு முனையக் கூடாது. மக்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு 8 வழிச்சாலை போடுவதற்கு நினைத்தால் மக்கள் மன்றத்தில் அதற்குரிய தீர்ப்பு கிடைத்தே தீரும்” என தெரிவித்துள்ளார்