தமிழ்நாடு முழுவதும் ஆர்வம் காட்டும் மக்கள்... தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றம்

தமிழ்நாடு முழுவதும் ஆர்வம் காட்டும் மக்கள்... தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றம்
தமிழ்நாடு முழுவதும் ஆர்வம் காட்டும் மக்கள்... தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றம்
Published on

தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தமிழ்நாட்டு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் அந்த ஆர்வத்திற்கு ஏற்ப அதற்கு நிகரான தடுப்பு மருந்து கையிருப்பு இல்லாத காரணத்தினாலும், சில மையங்கள் செயல்படாததாலும், சில மையங்களில் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாலும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புவதை  பார்க்க முடிகிறது. இன்னும் சில இடங்களில் மக்கள் தடுப்பூசிக்காக போராட்டத்திலும் இறங்கி வருகின்ற சூழல் நிலவுகிறது.

சென்னை - தலைநகர் சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் இன்று மற்றும் நாளை இரண்டாவது தவணை தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியுள்ளதுது. இதற்காக 62 ஆயிரத்து 50 கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை முழுவதும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களை கடந்தவர்கள், தங்கள் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களுக்கு சென்று இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

மதுரை - மதுரையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 75 மையங்களில் 41 மையங்கள் செயல்படவில்லை. நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்து 450 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இன்று 4 ஆயிரத்து 700 டோஸ் மட்டுமே கையிருப்பில் உள்ளதால், 34 மையங்களில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த மையங்களிலும் 50 முதல் 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால், நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

கோவை - கோவை மாவட்டம் ஆலாந்துறை பூலுவம்பட்டி உயர்நிலைப்பள்ளியில் காலை முதல் தடுப்பூசிக்காக காத்திருந்த மக்கள் தடுப்பூசி போட தாமதமானதால் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சமாதானம் செய்து மக்களை கலையச் செய்தனர். மேலும் டோக்கன் வைத்திருந்த மக்கள் வரிசையாக வரச்செய்து தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கன்னியாகுமரி - கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தோவாளை, அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட13 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாலை முதலே மக்கள் குவியத்தொடங்கினர். சில மையங்களில், இன்று தடுப்பூசி கிடையாது என ஊழியர்கள் தெரிவித்ததையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சில மையங்களில் டோக்கன்கள் மட்டும் கொடுத்து மக்களை அனுப்பி வைத்தனர். தடுப்பு மருந்துகள் காலதாமதமாக வந்து சேர்ந்ததால் 11 மணிக்கு பிறகே தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com