செய்தியாளர்: முத்துப்பழம்பதி
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள மாஞ்சான் விடுதி ஊராட்சி மழவராயன்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தை திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் கூறுகையில்...
தமிழ்நாட்டில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் தாக்கத்தை ஏற்படுத்த போவதில்லை என்று பாஜக தலைமைக்குத் தெரியும். அதனால் அவர்களுக்கு மையமாக உள்ள மாநிலத்தில் மட்டும் வேட்பாளரை பாஜக அறிவித்துள்ளது. பாஜகவும் பல மாநிலங்களில் கூட்டணி முடிவு செய்யாமல் தான் உள்ளது எங்கெங்கெல்லாம் கூட்டணி இல்லையோ அங்குதான் வேட்பாளரை பாஜக அறிவித்துள்ளது. பாஜக முன்பாகவே வேட்பாளரை அறிவிப்பதால் அவர்கள் முந்திக் கொண்டு செல்வது என்று அர்த்தமில்லை.
காங்கிரஸ் திமுக கூட்டணி உறவு நீண்ட கால உறவு அது என்றும் நிலைத்து நிற்கும். சுமுகமாக இருக்கும் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் சீட்டுகள் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். இருப்பது 39 தொகுதி தான் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அதற்குள் தான் அடங்க முடியும். இது திமுக தலைமைக்கு நன்றாக தெரியும். அவர்கள் கூட்டணியில் இருக்கும் அனைவருக்கும் சமூகமாக பிரித்துக் கொடுப்பார்கள்.
பாஜகவுக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் உள்ளது என்பது மே மாதம் வாக்கு எண்ணும் போது தெரிந்துவிடும். எத்தனை முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தாலும் மாற்றம் வராது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு விலைவாசி உயர்வு எப்படி உள்ளது என்பதை பொதுமக்கள் பார்க்கிறார்கள். விலைவாசி கூடியதற்கு குழப்பமான ஜிஎஸ்டி தான் காரணம். திருப்பூரில் பாஜக சார்பில் பிரதமர் மோடியை வைத்து நடத்திய கூட்டம் கூட அவர்களுக்கு வெற்றியை தரவில்லை. இவர்கள் சேருவார்கள் அவர்கள் சேருவார்கள் என்றெல்லாம் கூறினார்கள் ஆனால், யாரும் சேரவில்லை.
370 சீட்டுகளை பெறுவோம் என்று எண்ணுவது அகண்ட பாரதத்தில் வேண்டுமென்றால் அவர்களது ஆசை நிறைவேறும். கருத்துக் கணிப்பை முடிவு செய்துவிட்டால் எதற்காக தேர்தல். மே மாதம் தேர்தல் நடக்கப் போகிறது வாக்கு எண்ணும்போது வாக்கு சதவீதம் வெற்றி என்ன என்பது தெரியவரும்.
போதைப் பொருள் கலாச்சாரத்தை தமிழ்நாடு அளவில் பார்க்கக் கூடாது. இந்திய அளவில் பார்க்க வேண்டும் குஜராத்தில் உள்ள முத்ரா போர்ட்டில் மட்டும் எவ்வளவு போதைப் பொருள்கள் ஏற்றுமதியாகி உள்ளது. எவ்வளவு போதைப் பொருட்களை பிடித்துள்ளனர் என்று பாருங்கள்.
காங்கிரஸ் திமுக கூட்டணி பேச்சு வார்த்தை சுமுகமாக போய்க்கொண்டுள்ளது யாரையும் கெஞ்சவில்லை யாரையும் மிரட்டவும் இல்லை. திமுகவுடன் உள்ள உறவு பழங்கால உறவு வலுவான உறவு. பல தேர்தல்களை சந்தித்து பல வெற்றிகளையும் பெற்றுள்ள கூட்டணி. ஒரு பிரச்னையும் இருக்காது அனைவருக்கும் திருப்திகரமாக இருக்கும். அதிமுக காங்கிரசை கூட்டணியில் அழைப்பதிலிருந்து காங்கிரஸ் கட்சி அனைவராலும் நேசிக்கப்படுகின்ற கட்சி என்று மிகத் தெளிவாக தெரிகிறது.
கட்சிக்குள் ஒருவருக்கு சீட் வேண்டும், வேண்டாம் என்று சொல்வது இயல்பு தான். ஆனால், யாருக்கு சீட்டு வழங்க வேண்டும் என்று கட்சி தலைமை முடிவு செய்து அறிவிக்கும். மூன்று முறை காங்கிரஸில் இடம் ஒதுக்கி எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி பாஜகவில் இணைந்தது வருத்தம் அளிக்கிறது. ஆனால், இந்த சமயத்தில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு செல்வது வாடிக்கை தான்” என்று தெரிவித்தார்.