” பிஎஸ்பிபி பள்ளி பிரச்னையை சாதி பிரச்சனையாக திசை திருப்பும் முயற்சி பல தரப்பிலிருந்தும் நிகழ்வதைக் காண்கிறேன்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது.
தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். 2 பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பை பற்றிய எனது பதற்றமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ’மகாநதி’. இன்னும் அந்த பதற்றம் குறைந்தபாடில்லை. ஆன்லைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை நம் பிள்ளைகள் சொல்லும் பிரச்னைகளுக்கு காது கொடுக்க வேண்டும். அவர்களது அச்சத்தைப் போக்கி துணையாக இருக்கவேண்டும்.
இந்தப் பிரச்னையை சாதிப் பிரச்னையாகக் திசை திருப்பும் முயற்சி பல தரப்பிலிருந்தும் நிகழ்வதைக் காண்கிறேன். குற்றத்தை பேசாமல் குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்னையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக அமைந்துவிடும்” என்று கூறியிருக்கிறார்.