”நான் தற்கொலை செய்துகொண்டால் அதற்கு கல்லூரி முதல்வர்தான் காரணம்” கண்ணீர்விட்ட பேராசிரியர்!

”நான் தற்கொலை செய்துகொண்டால் அதற்கு கல்லூரி முதல்வர்தான் காரணம்” கண்ணீர்விட்ட பேராசிரியர்!
”நான் தற்கொலை செய்துகொண்டால் அதற்கு கல்லூரி முதல்வர்தான் காரணம்” கண்ணீர்விட்ட பேராசிரியர்!
Published on

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் பேராசிரியர்களை, கல்லூரி முதல்வர் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அழுதுக்கொண்டே காலை முதல் மாலை வரை முதல்வர் அறையின் வெளியே பேராசிரியர் ஒருவர் நின்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசுப் பெண்கள் கலைக் கல்லூரி திருச்சி சாலையில் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரி முதல்வராக பால் கிரேஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நாமக்கல் கல்லூரியில் பணியாற்றி வந்த போது ஏற்கனவே பணியாற்றிய கல்லூரியில் அம்பேத்கர் படத்தை அகற்றியது, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை தரக்குறைவாக பேசுவது உள்ளிட்ட செயல்கள் காரணமாக கடந்த மாதம் சஸ்பென்ட் செய்யப்பட்டார். அதன்பின் நீதிமன்றத்திற்கு சென்று சஸ்பென்ட் செய்யப்பட்டதற்கு எதிராக தடையாணையை பெற்று மீண்டும் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், கல்லூரி வணிகவியல் துறையில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு நல்லுசாமி என்னும் துறைத் தலைமை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் ஒருவரும் என 2 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இந்தச் சூழலில் இன்று வணிகவியல் துறையின் தலைமைப் பேராசிரியர் நல்லுசாமி, தனது துறையில் பயிலும் மாணவிகளின் இண்டன்ஷிப்புக்கு கையெழுத்து வாங்க கல்லூரி முதல்வர் பால் கிரேஸை சந்தித்துள்ளார். அங்கு நல்லுசாமியை, கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் மாணவிகள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், எவ்வாறு இந்தக் கல்லூரியில் வேலை செய்கிறீர்கள் என கடிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கையெழுத்து போட முடியாது எனவும் தெரிவித்ததாகத் தெரிகிறது.

இதனால் வணிகவியல் துறை மாணவிகளும், துறையின் தலைமை பேராசிரியர் நல்லுசாமியும் காலை முதல் மாலை 6 மணி வரை கல்லூரி முதல்வர் பால் கிரேஸின் அலுவலகத்தின் வெளியேவே நின்றுக் கொண்டிருந்தனர்.‌ 6 மணிக்கு மேல் மாணவிகளை மட்டும் உள்ளே அழைத்த முதல்வர் பால் கிரேஸ் துறைத் தலைவர் நல்லுசாமிக்கு எதிராக கடிதம் எழுதி கேட்டார். அதற்கு மாணவிகள் முடியாது எனக் கூறவே மாணவிகளை மிரட்டி கடிதம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் செய்வது அறியாமல் நின்ற துறைத் தலைவர் நல்லுசாமி மாணவிகள் முன்னிலையில் கண்ணீர் விட்டு அழுதார்.

அப்போது பேசிய அவர், கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் சஸ்பென்ட் செய்யபட்டு மீண்டும் பணியில் அமர்ந்த பிறகு கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஆசிரியல்லா பணியாளர்கள், அலுவலக பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்ததிற்கு நீங்கள் தான் காரணம் என கூறி ஒருமையில் பேசி பழி வாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார் எனவும், கல்லூரி பேராசிரியர்களுக்கு எதிராக கெளரவ பேராசிரியர்களை தூண்டி விட்டு பிரச்சினையை உருவாக்குகிறார் எனவும், தான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் தான் காரணம் கூறி கண்ணீர் விட்டு அழுதுக்கொண்டே கல்லூரியை விட்டு சென்றதாகத் தெரிகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் அவர்களை தொடர்பு கொண்ட போது, அவர் செய்தியாளர் என கூறிய உடன் உடனடியாக தொடர்பை துண்டித்து விட்டார். மீண்டும் அவரை தொடர்பு கொண்ட போதும் அவர் எவ்வித பதிலும் அளிக்காமல் தொடர்பை துண்டித்த வண்ணமே இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com