காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலை விரிவாக்க பணியால் தென்னேரியின் கரை வலுவிழந்துள்ளது புதிய தலைமுறை கள ஆய்வில் தெரியவந்தது. இதுகுறித்து செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக கரையை பலப்படுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் ஏரிக்கு அடுத்து பெரிய ஏரியாக கருதப்படுவது தென்னேரி. அதன் பரப்பளவு 1800 ஏக்கர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 18 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் நீர்மட்டம் தற்போது 14 அடியாக உள்ளது. தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது.
இந்நிலையில், வாலஜாபாத்- சுங்குவாசத்திரம் சாலை விரிவாக்கப் பணிக்காக ஏரியின் கரை பகுதி சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு 25 அடி அகலத்திற்கு கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தென்னேரியின் கரையில் இரண்டு இடங்களில் விரிசல் ஏற்பட்டதோடு கரை வலுவிழந்து உடையும் தருவாயில் உள்ளது புதியதலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே 2015ஆம் ஆண்டில், ஏரி நிரம்பி கரை உடைந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளான நிலையில், மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும், ஏரி நிரம்பினால் கரை உடையும் அபாயம் உள்ளது எனவும் ஏரியில் கசிவு உள்ளதால் கரையை பலப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து புதியதலைமுறை செய்தி வெளியிட்டதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பொறுப்பு மாவட்ட ஆட்சியர் கரை வலுவிழந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து பொறுப்பு மாவட்ட ஆட்சியர் முத்துராமலிங்கம், கூறுகையில் "கரையின் 2 இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கரையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மக்கள் அச்சப்பட தேவையில்லை" எனத் தெரிவித்தார்.