செய்தியாளர்: மலைச்சாமி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள நடுகோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் பாண்டி - ஜெயபிரியா தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மீண்டும் கருவுற்ற ஜெயபிரியா, கடந்த 21 ஆம் தேதி பிரசவத்திற்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜெயபிரியாவிற்கு உடனடியாக குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 23ம் தேதி, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ‘கர்ப்பப்பையை அகற்ற வேண்டும்’ எனக் கூறி அதற்கான சிகிச்சையை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயபிரியா தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்துள்ளார். ஆனால் நேற்று ஜெயபிரியாவின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்து அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெய பிரியாவின் உறவினர்கள், “மருத்துவர்களின் அலட்சியப்போக்கால்தான் ஜெயபிரியா உயிரிழந்தார்” எனக் கூறி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக நேற்று குழந்தையுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆண்டிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான காவல்துறையினர், “நடந்ததை புகார் மனுவாக கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கிறோம்” என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பரபரப்பாக காணப்பட்டது.
இது குறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவக்குமரனிடம் நாம் கேட்டபோது... “பெரியகுளம் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்தப் பெண்ணை அழைத்து வரும் போதே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும், எதிர்பாராவிதமாக அவர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உறவினர்களின் அனுமதி பெற்றே பெண்ணின் கர்ப்பப்பை அகற்றப்பட்டது” என தெரிவித்தார்