குரங்கணி மலைக்கு டிரெக்கிங் அழைத்து சென்ற சென்னை டிரெக்கிங் கிளப்பை சேர்ந்த பெல்ஜியம் நாட்டின் பீட்டர் வான் கெய்ட்க்கு முன்ஜாமின் வழங்கியது மதுரை உயர் நீதிமன்றம்.
சென்னை பாலவாக்கத்தில் குடியிருக்கும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வான் கெய்ட் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில் “சென்னையில் உள்ள சில தன்னார்வலர்கள் உதவியுடன் சென்னை டிரெக்கிங் கிளப் எனும் அமைப்பை 2013 ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறோம். இந்த அமைப்புக்கு யாரும் தலைமை வகிக்கவில்லை,யாரிடமும் நன்கொடைகள் வசூலித்ததில்லை. இந்நிலையில் இந்த அமைப்பில் உள்ள திவ்யா முத்துக்குமார், நிஷா ஆகியோர் மகளிர் தினத்தை முன்னிட்டு கொழுக்கு மலை மற்றும் குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். இதற்காக இந்த அமைப்பில் உள்ள அனுபவசாலிகளான அருண் பிரபாகர் மற்றும் விபின் தாமோதரன் ஆகியோர் உதவி செய்தனர். முறையான அனுமதி பெற்றே 27 பேருடன் மலைக்கு சென்றுள்ளானர். ஆனால், குரங்கணியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி ஒருங்கிணைத்தவர்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். 27 பேரையும் காட்டுக்குள் அனுமதிக்க வனத்துறையினர் கட்டணம் வசூலித்துள்ளனர். அதற்கான ரசீது இந்தப் பயிற்சியை ஒருங்கிணைத்த நால்வரிடம் தான் இருந்துள்ளது. அவர்கள் இறந்த காரணத்தால், 27 பேரும் சட்டவிரோதமாக அனுமதியில்லாமல் காட்டுக்குள் நுழைந்ததாக வனத்துறையினரும், போலீஸாரும் கூறி வருகின்றனர். மலையேற்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இந்நிலையில் மலையேற்றப் பயிற்சிக்கு தலைமை வகித்ததாக கூறி குரங்கணி போலீஸார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது முற்றிலும் தவறானது. எனவே இந்த வழக்கில் இருந்து எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் குரங்கணி காவல் ஆய்வாளர் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். அதனையடுத்து வழக்கு விசாரணைக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது பீட்டர் வான் கெய்ட்க்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.