கல்விக் கட்டணம் கட்டாத 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்காத தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பள்ளி வாயில் முன்பாக பெற்றோர் போராட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சென்டான்ஸ் ஜெ.சி மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி, ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை கல்விக் கட்டணம் கட்டாததால், நேற்று முதல் நடைபெற்று வரும் ஆண்டு தேர்வை எழுத அனுமதிக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டி மாணவர்களின் பெற்றோர் தனியார் பள்ளி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று தேர்வு எழுத சென்ற கல்விக் கட்டணத்தை கட்டாத மாணவர்களை தேர்வு எழுதவிடாமல் நிறுத்தி வைத்ததாகவும், இதனால் பெற்றோர்கள் தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே கட்டணத்தை செலுத்துவிடுகிறோம் என்று கூறியும் பள்ளி நிர்வாகம் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து பள்ளி கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிப்போம் என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பள்ளி மாணவர்களை கூட்டி வந்த பெற்றோர், பள்ளி வளாகத்திற்கு முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுபோன்ற கல்விக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்ற தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.