செய்தியாளர்: மலைச்சாமி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா முத்தாலம்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட தொப்பையாபுரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள காலனி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு 25 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. நாளடைவில் முறையாக பராமரிப்பின்றி தொகுப்பு வீடுகள் மிகவும் சேதம் அடைந்துள்ளது.
கட்டடத்தின் வெளிப்புற சுவர், உட்புறத்தின் மேற்கூரைப்பகுதி ஆகியவை முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் மோசமாக காணப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சின்னப்பொண்ணு (55) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தொப்பையாபுரம் காலனி பகுதி மக்கள் கூறிய போது...
எங்களது காலனியில் 25 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான வீடுகள் மிகவும் சேதமடைந்து எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. குழந்தைகளோடு; ஒவ்வொரு நாளும் அச்சத்துடனே இரவு நேரத்தில் உறங்குகிறோம். இதே நிலை நீடித்தால் உயிரிழக்கும் சூழலும் அதிகமாகும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
இங்குள்ள தொகுப்பு வீடுகளை பராமரித்துக் கொடுக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், யாரும் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.
இது குறித்து முத்தாலம்பாறை ஊராட்சி தலைவரிடம் கேட்டபோது...
இந்த தொகுப்பு வீடுகளை பராமரிக்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதாகவும், இந்த ஆண்டும், இங்குள்ள தொகுப்பு வீடுகள் மயிலாடும்பாறை ஊரக வளர்ச்சிதுறை அதிகாரிகள் மூலம் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. விரைந்து இந்த தொகுப்பு வீடுகள் அனைத்தும் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.