தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அரசு தொடக்கப்பள்ளி எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் உள்ளதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கொட்டோடைப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 60 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், சுவர்களில் விரிசல் ஏற்பட்டும், மேற்கூரை பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது.
பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறும் பெற்றோர், ஆபத்தான நிலையில் பள்ளிக் கட்டடம் இருப்பதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக இருப்பதாகக் கூறுகின்றனர். இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியையிடம் கேட்டதற்கு உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.