கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் கும்பக்கரை அருவி நிரம்பி வழிந்தது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் கும்பக்கரை அருவியில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த கோடை மழையால் நீர்வரத்து அதிகரித்து சீராக உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க சுற்றுலா பயணிகள் நீர்நிலைகளை நாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மேலும் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதால் இன்று அதிகபட்சமாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குவிந்ததால் கும்பக்கரை அருவி சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தது.