தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பார்மலின் வேதிப்பொருள் கலந்த மீன்கள் விற்கப்படுகிறதா என்று உணவு பாதுகாப்பு துறையின் மூலம் சோதனை நடத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதிலும் கொரோனா பரவலால் மூன்றாவது அலை அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்திலும் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும், நோய்த் தடுப்பு மருந்துகளை செலுத்தியும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இரண்டு தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோயுள்ளவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இன்று முதல் பூஸ்டர் டோஸ் எனப்படும் கூடுதல் மருந்து செலுத்தும் நிகழ்ச்சியை பெரியகுளம் தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இதன்பின்னர் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பார்மலின் என்கிற ரசாயன பொருள் கலப்படம் செய்யப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்பட்டது, உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்கப்பட்டது. அப்போது உணவு பாதுகாப்பு துறையின் மூலம், மாவட்டம் முழுவதிலும் மீன் கடைகளில் விற்கப்படும் மீன்களில், பார்மலின் ரசாயன பொருள் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்தார்.
பெரியகுளத்தில் ரசாயனம் தடவிய 200 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, மதுரையில் மொத்த வியாபாரிகளிடம் இருந்து மீன்கள் வாங்கி வருவதாகவும், இதில் ரசாயனம் கலந்திருக்கிறதா என்பதை தங்களால் கண்டறிய முடியவில்லை என்றும் பெரியகுளம் மீன் வியாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மதுரை மொத்த வியாபாரிகள் மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரியகுளம் மீன் வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.