செய்தியாளர்: மலைச்சாமி
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி வெறிநாய் தாக்குதல் சம்பவம் நடைபெறுகிறது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு, வருசநாடு பகுதியில் வெறிநாய் கடித்ததில் ஒரே நாளில் 13 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு கடமலைக்குண்டு அருகே உள்ள குமணந்தொழு, ஆலந்தளிர் பகுதிகளில் வெறிநாய்கள் கடித்ததில் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்த 15 பேருக்கும் கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து நாய் கடித்து சிகிச்சைக்கு வந்த அனைவரையும், வெறிநாய் கடிக்கான ஊசிகளை தொடர்ந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்திக் கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து வெறிநாயை பிடிக்கும் முயற்சியில் குமணந்தொழு ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.