தேனியில் ஜோதிடம் பார்க்கச் சென்ற தன்னை கட்டாயப்படுத்தி நிர்வாண பூஜை செய்து போட்டோ எடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றதாக ஊராட்சி மன்ற தலைவர் மீது இளம்பெண் ஒருவர் தேனி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் ராஜதானி அருகே மஞ்சநாயக்கன் பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் காமாட்சி (22). இவர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ”எனது தாய், தந்தையர் காலமாகி விட்டனர். குடும்ப பிரச்னை காரணமாக கணவரை பிரிந்து வாழ்கிறேன். ஆதரவற்ற நிலையில் நான் கணவருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டேன். இந்த சூழலில், ஜோதிடம் பார்த்து பரிகாரம் செய்தால் சேர்ந்து வாழலாம் என எனது தோழி கண்மணி எனக்கு ஆலோசனை கூறினார்.
இதையடுத்து நான், கண்மணி மற்றம் கண்மணியின் கணவர் மனோ ஆனந்த் ஆகிய மூவரும் ஜோதிடம் பார்த்து குறி சொல்லும் போடிநாயக்கனூர் பொட்டிபுரம் ஊராட்சி தலைவர் செல்வராஜ் என்பவரது தோட்டத்தில் உள்ள வீட்டிற்குச் சென்றோம். மாந்ரீகம் மற்றும் தாயத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் செலவாகும் என செல்வராஜ் கூறியதைத் தொடர்ந்து அவரிடம் 20 ஆயிரம் பணமும் கொடுத்தேன்.
இதைத் தொடர்ந்து என்னுடன் வந்தவர்களை வெளியே போகச் சொல்லிவிட்டு, மாந்த்ரீக தாயத்து கட்டுவதற்காக செல்வராஜ் என்னை தோட்டத்தில் உள்ள ஒரு குடிசைக்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து மாந்ரீகம் பலிக்க வேண்டும் என்றால் நிர்வாண பூஜை நடத்த வேண்டும் என கூறினார். மறுத்தால் உயிர் போய்விடும் என மிரட்டினார். இதைக் கேட்டு பயந்து நானும் என் ஆடைகள் முழுவதையும் களைந்தேன். இந்நிலையில், முழு நிர்வாணமாக இருந்த என்னை, அவரது மொபைல் போனில் புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர், நிர்வாண பூஜையை வெளியில் சொன்னால் மாந்ரீகம் பலிக்காது எனவும் எச்சரித்தார்.
தொடர்ந்து நிர்வாண நிலையில் இருந்த என்னை பாலியல் தொந்தரவு செய்தார். பாலியல் வன்கொடுமைக்கும் ஆட்படுத்த முயன்றார். நான் கூச்சலிட்டு வெளியே வந்துவிட்டேன். இதை யாரிடமாவது சொன்னால் தனது மாந்ரீகத்தால் கொன்றுவிடுவேன் என மிரட்டினார். இதுகுறித்து போடிநாயக்கனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது தேனி எஸ்பி அலுவலர்கத்தில் புகார் செய்துள்ளேன்” இவ்வாறு காமாட்சி தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பொட்டிபுரம் ஊராட்சி தலைவரான செல்வராஜிடம் கேட்டபோது, 'என் மீது புகார் கூறிய பெண், தனது பிரச்னைகளைக் கூறி ஜோதிடம் பார்க்க வந்தார். கணவரோடு சேர்த்து வைக்கச் சொன்னார். அதற்கு, நான் ஊராட்சி தலைவரான பின் ஜோதிடம் பார்ப்பதில்லை. மக்கள் பணிக்கே நேரம் போதவில்லை. எனவே அவரது குடும்ப பிரச்னை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சொன்னேன். இதற்காக இப்படி பொய்ப்புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து நானும் விளக்கமான புகாரை எஸ்பி அலுவலகத்தில் அளித்துள்ளேன். பொட்டிபுரம் பஞ்சாயத்தில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய சிவக்குமார் என்பவரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தேன். அவரது மணல் அள்ளிய லாரி பற்முதல் செய்யப்பட்டதுடன் அவரும் கைது செய்யப்பட்டார். அந்த விரோதத்தை மனதில் வைத்து இந்த பெண்ணின் வறுமையை பயன்படுத்தி என் மீது பொய்யான பாலியல் புகார் கொடுக்க வைத்துள்ளார் என தெரிவித்தார்.
தேனியில் மாந்ரீகம் என்ற பெயரில் நிர்வாண பூஜை நடத்தப்பட்டதாக இளம்பெண் ஊராட்சி தலைவர் மேல் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்த உண்மைத் தன்மையை அறிய தேனி ஏடிஎஸ்பி விவேகானந்தன் தலைமையிலான போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.