தேனி: பயனாளிகளுக்கு வழங்கப்படும் முன்பே சேதமடையத் துவங்கிய அரசு கட்டிய புது வீடுகள்

தேனி: பயனாளிகளுக்கு வழங்கப்படும் முன்பே சேதமடையத் துவங்கிய அரசு கட்டிய புது வீடுகள்
தேனி: பயனாளிகளுக்கு வழங்கப்படும் முன்பே சேதமடையத் துவங்கிய அரசு கட்டிய புது வீடுகள்
Published on

சேதமடைந்த மழை நீர் வடிகால் வாய்க்கால் காரணமாக புதிதாக கட்டப்பட்ட வீடுகள் பழங்குடியின மக்களுக்கு வழங்குவதற்கு முன்பே சேதமடைய துவங்கிய அவலம் தேனி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணைக்கு மேல் உள்ள ராசிமலை பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளில் பழங்குடி இன மலைவாழ் மக்கள் வசித்து வந்தனர். பழங்குடியின மக்கள் வாழ்ந்து வரும் வீடுகளின் நிலை குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தொடர்ந்து செய்தி வெளியிட்டதன் அடிப்படையில் கடந்த 2018 ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பழங்குடியின மலை வாழ் மக்கள் வாழ்ந்த 35 பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டும் பணிகள் துவங்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று  தற்போது கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன.

வீடுகள் கட்டும் பணி முடிவடைந்து பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு இன்னும் வீடுகள் வழங்கப்படாமல் உள்ளன. கடந்த 15 தினங்களுக்கு முன்பாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வீடுகள் கட்டப்பட்ட பகுதியில் உள்ள மலைகளில் இருந்து வந்த மழை நீரானது புதிதாக கட்டப்பட்ட வீடுகளில் அமைக்கப்பட்டு இருந்த வடிகாலில் சென்ற நிலையில் அந்த வாய்க்கால் முற்றிலும் சேதம் அடைந்தது. மழைநீர் வடிகால் வாய்க்கால் சேதம் அடைந்ததால் மழை நீர் அனைத்தும் கீழ்பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீடுகள் இருக்கும் பகுதிக்கு செல்வதால் வீடுகள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பழங்குடியின மலைவாழ் மக்கள் கூறுகையில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் வீடுகள் ஒப்படைக்கப்படாத நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் மழை நீர் செல்லும் வடிகால் வாய்க்கால் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாகவும், மழைக்காலங்களில் மேலே உள்ள பாறைகள் உருண்டு விழும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மழை நீரால் வீடுகள் சேதம் அடையாமல் இருக்க அந்தப் பகுதியில் மழை நீர் தடுப்புச் சுவர் கட்டி மழை நீரை மாற்று பாதையில் செல்ல நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வீடுகள் சேதம் அடையாமல் இருக்கும் என பழங்குடியின மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரியிடம் கேட்டபோது உரிய பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com