செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை பூக்கடை பகுதியில் அரசு பல் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவிகளுக்கான விடுதி அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், தூங்கிக் கொண்டிருந்த மாணவிகளின் அறைக்குள் சென்று செல்போன்களை திருடிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சத்தம் கேட்டு மாணவிகள் எழுந்ததை அடுத்து அந்த மர்ம நபர் சுவர் ஏறிக்குதித்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து மாணவிகள் தங்கள் அறைகளில் இருந்த பொருட்களை சரிபார்த்தபோது, ஆறு விலையுயர்ந்த செல்போன்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பெண்கள் விடுதி மேற்பார்வையாளர் பாக்யலட்சுமி பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் மாணவிகள் விடுதிக்கு வந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இளைஞர் ஒருவர் விடுதிக்குள் வந்து மாணவிகளின் அறையில் இருந்த செல்போன்களை திருடிக் கொண்டு ஓடும் காட்சிகள் பதிவாகி இருந்துள்ளன. இதையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பூக்கடை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பல் மருத்துவக் கல்லூரி மாணவிகள் விடுதியில் புகுந்து மாணவிகளின் செல்போன்களை திருடிச் சென்ற சம்பவம் மாணவிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் மாணவிகள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.