தீரன் பட பாணியில் கொள்ளை: 13 வருடங்களுக்குப் பிறகு சிக்கிய குற்றவாளி – நடந்தது என்ன?
மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள பூட்டிய வீட்டில் கடந்த 2010 ஆண்டு 33 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது தொடர்பான வழக்கில் சம்மந்தப்பட்ட குஜராத் மாநிலம் தாகூத் மாவட்டம், மோதிலட்சி கிராமத்தைச் சேர்ந்த சத்ரசிங் என்பவரை போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் சாலையில் உள்ள பழைய இரும்புக் கடையில் ரூபாய் 2000 திருடு போன வழக்கு தொடர்பாக நான்சிங் மற்றும் அவனது கூட்டாளி ஒருவரையும் அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைரேகை சோதனை செய்ததில் நான்சிங் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அவனியாபுரம் மல்லிகை குடியிருப்பு பகுதியில் கொள்ளை சம்பந்தமாக தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர் என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், இவர் சத்ரசிங்கின் கூட்டாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து நான்சிங் மூலமாக தொலைபேசி டவரை வைத்து சத்ரசிங் இருக்கும் இடத்தை காவல்துறையினர் கண்டறிந்தனர். பின்னர் மதுரை மாநகர் காவல் ஆணையர் நரேந்திர நாயர் ஆணையின் பேரில் காவல் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் செல்வக்குமார் மேற்பார்வையில் அவனியாபுரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விமலா சப் இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையில் தனிப்படையினர் குஜராத் மாநிலம் சென்றுள்ளனர். அப்போது அங்கு சத்ரசிங் ஒரு கட்டடத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்தார். உடனே அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், குற்றவாளி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தீரன் படத்தில் வருவதை போல தமிழ்நாடு வந்து பூட்டியுள்ள வீடுகளை நோட்டமிட்டு பின்னர் கொள்ளையடித்து நகைகளுடன் குஜராத் சென்று கூட்டாளிகளுடன் பிரித்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்ததும். இந்தியாவில் பல மாநிலங்களிலும், மதுரையில் பல இடங்களிலும், திருநெல்வேலி, கோயம்புத்தூர். திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இந்த நிலையில் சத்ரசிங்கை நேற்று 24-07-2023 அவனியாபுரம் காவல் நிலையத்தில் 2010 ஆம் ஆண்டு திருட்டு வழக்கு தொடர்பாக 13-ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த அவனியாபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான தனிப்படையினரை மதுரை மாநகர் காவல் ஆணையர் பாராட்டினார்.