திரையரங்குகளுக்கான கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகத்திலுள்ள சுமார் ஆயிரம் திரையரங்குகள் இரண்டாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளன.
ஜி.எஸ்.டி. வரியுடன் தமிழக அரசின் கேளிக்கை வரியையும் சேர்த்து இரட்டை வரி செலுத்த முடியாது என்று தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இந்நிலையில் திரைத்துறை பிரதிநிதிகள் தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி திரையரங்குகளை காலவரையின்றி மூடுவதாக அறிவித்து நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள சுமார் 1,000 தியேட்டர்கள் நேற்று மூடப்பட்டன. நேற்று மட்டும் டிக்கெட் கட்டணமாக வசூலாக வேண்டிய ரூ.15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் திரையரங்குகள் முடப்பட்டுள்ளன. மேலும் திரைத்துறை பிரதிநிதிகள் இன்றும் தமிழக அரசுடன் பேச்சு நடத்த உள்ளதாகவும் இதில் தமிழக அரசு கேளிக்கை வரியை ரத்து செய்து உத்தரவிடும் என்று நம்புவதாகவும் தயாரிப்பாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.