ஆதார் மையத்தில் சான்றிதழுக்காக கட்டிய பணத்துக்கு ரசீது கேட்ட இளைஞரை, ஆதார் மைய ஊழியர்கள் அடித்து உதைத்த வீடியோ வைரலாகப் பரவிவருகிறது. அடி வாங்கிய இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் ஆதார் நிரந்தர பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தினமும் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பலர் ஆதார் கார்டு பெயர், முகவரி மாற்றம் மற்றும் கைரேகை பதிவு போன்றவற்றிற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், இன்று பலவான்குடியைச் சேர்ந்த ஹரி என்ற இளைஞர் தனது தங்கைக்கு கட்டாய கைரேகை பதிவு (mandotary biomatric update) செய்ய அழைத்து வந்துள்ளார். கைரேகை மற்றும் கருவிழி பதிவு முடிந்தவுடன் பணியில் இருந்த பெண் ஊழியர் சண்முகப்பிரியா என்பவர், பதிவிற்கு கட்டணமாக 120 ரூபாய் பணம் கேட்டு பெற்ற நிலையில், ரசீது கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் பணம் கட்டிய ரசீதை கேட்டு ஹரி வாக்குவாதம் செய்யவே, ஹரியை சண்முகப்பிரியாவுடன் சேர்ந்து சக ஊழியர் கோகுல் என்பவரும் சேர்ந்து இருவரும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் வீடியோவை ஆதார் மையத்திற்கு வந்த ஒருவர் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து தன்னை தாக்கிய சம்பவம் குறித்து இளைஞர் ஹரி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் லெனின் சண்முகப்பிரியாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதே சமயம் கட்டிய பணத்திற்கு ரசீது கேட்ட நபரை ஆதார் மைய பெண் மற்றும் ஆண் ஊழியர் தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.