இடப்பிரச்னை காரணமாக தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர் (35). தச்சு வேலை செய்து வரும் இவர் பங்களா தெரு சண்முகம் என்பவரிடம், ராஜகோபால் நகர் 1வது தெருவில் ஒன்றறை சென்ட் இடத்தை மொத்தம் 6 லட்சம் கிராயம் பேசி 4 லட்சம் ரூபாய் அட்வான்ஸாக கொடுத்துள்ளார். பின்னர் அந்த இடத்தில் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடும் கட்டியுள்ளார்.
இந்நிலையில், இட உரிமையாளருக்கு 2 லட்சம் ரூபாய் பாக்கி கொடுக்க வேண்டியிருந்ததால் இட உரிமையாளர் பத்திரம் போட்டுக் கொடுக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுந்தர் புகார் அளித்துள்ளார். மேற்படி புகார் குறித்து எந்தவித நடவடிக்கை எடுக்காததால் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்பாகம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர் செல்போன் டவரில் இருந்து இறங்கினார். இது குறித்து தென்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகம் முன்பு மின் கோபுர டவரில் ஏறி தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.