கரூரில் பல்லவன் கிராம வங்கியில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் வாங்கிய கடனை, கடன் வசூலிக்கும் முகவரிடம் செலுத்திய பிறகும் வங்கி நிர்வாகம் கடன் செலுத்தவில்லை என நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து நூற்றுக்கும் அதிகமான பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் வாங்கல் பகுதி உள்ள, வாங்கல், மேட்டுப்பாளையம், கடம்பன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு அந்த பகுதியில் உள்ள கிராம வளர்ச்சி மையம் என்ற தொண்டு நிறுவனம், வாங்கலில் உள்ள பல்லவன் கிராம வங்கியில்( தமிழ்நாடு கிராம வங்கி) பல லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்துள்ளது.
இதையடுத்து கடன் பெற்ற சுயஉதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் கடன் தொகைக்கான தவணைகளை தொடர்ந்து கிராம வளர்ச்சி மையத்திடம் செலுத்தி அதற்கான ரசீதை பெற்று வைத்துள்ளனர். இந்நிலையில் பல்லவன் வங்கி தன்னிடம் கடன் பெற்ற மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது.
அந்த நோட்டீசில் பல்லவன் வாங்கியில் மகளிர் உதவிக்குழு பெண்கள் பெற்ற கடன்களை இதுநாள் வரை திருப்பிச் செலுத்தவில்லை எனவும் எனவே உடனடியாக செலுத்தவில்லை என்றால் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் வங்கியை அணுகி தாங்கள் பெற்ற கடனுக்கான தொகையை கடன் பெற்றுக் கொடுத்த முகவரான கிராம வளர்ச்சி மையத்தின் செலுத்தியுள்ளோம் அதற்கான ரசீதுகளையும் முறைப்படி பெற்று வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
சுயஉதவி குழு பெண்கள் செலுத்திய தொகை வங்கிக்கு வரவில்லை எனவும் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். தாங்கள் செலுத்திய தொகையை கிராம வளர்ச்சி மையம் பல்லவன் வங்கியில் செலுத்தாமல் ஏமாற்றியது தெரியவந்தது.
இதையடுத்து நூற்றுக்கும் அதிகமான பெண்கள் இன்று வாங்கல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கிராம வளர்ச்சி மைய நிர்வாகிகள் மீது புகார் அளித்தனர். இதையடுத்து காவல்நிலைய போலீசார் கடன் வசூல் செய்த கிராம வளர்ச்சி மையத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடமும் வங்கி அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுய உதவி குழுக்களிடம் கடன் தொகையை பெற்றுக் கொண்டு, வங்கியில் செலுத்தாத தொண்டு நினுவனத்தின. மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்தனர். அதேபோல், வங்கி நிர்வாகம் சார்பிலும் தொண்டு நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுத்து வசூல் செய்த தொகையை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதால், பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என வங்கித் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது