திமுக வெற்றிக்கு நாக்கை அறுத்த பெண் - வருத்தத்துடன் மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை

திமுக வெற்றிக்கு நாக்கை அறுத்த பெண் - வருத்தத்துடன் மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை
திமுக வெற்றிக்கு நாக்கை அறுத்த பெண் - வருத்தத்துடன் மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை
Published on

"திமுக வெற்றிக்காக வனிதா என்ற சகோதரி தன் நாக்கை இழந்தார் என்பதை அறிந்து வருந்துகிறேன்; இதுபோன்ற துயரங்களை ஏற்படுத்தாமல், ஏழை - எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை காணிக்கையாக செலுத்துங்கள்" என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா என்கிற தி.மு.க. தொண்டர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் தன் நாக்கை அறுத்துக் காணிக்கை செலுத்துவதாகக் கோயிலில் வேண்டிக்கொண்டதோடு அதை நிறைவேற்றியதாகவும் செய்தித்தாள்களில் படித்து நடுக்கமுற்றேன்.

தமிழக மக்கள் ஒரு துளி இரத்தம்கூட சிந்தாமல் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும், மனித நேயத்துடனும் செழிப்பாக வாழ வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்குறுதிகளை முன்வைத்தோம். நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகச் சகோதரி ஒருவர் தன் நாக்கை இழந்திருப்பதை பற்றிக் கேள்விப்படும்போது விழிகள் குளமாகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை உங்களுடைய காணிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலை ஒருபோதும் நம் வெற்றிக்காகச் சிதைத்துக் கொள்ளாதீர்கள். அது எனக்கு வருத்தத்தையே வரவு வைக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னையே சிதைப்பதாக எண்ணி எனக்கு மனக்காயம் உண்டாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் இதைப் போன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளைச் செய்திட கூடாது எனக் கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புன்னகையில்தான் நம் அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது. வனிதா என்ற சகோதரி விரைவில் உடல்நலம் பெற்று இயல்பு வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் 32 வயது மனைவி வனிதா சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு க ஸ்டாலின் முதல்வர் ஆனால், தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார். அதன்படி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு தனித்து திமுக வெற்றி பெற்றதால் பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்து உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொண்டார். கோவில் திறக்காததால் நாக்கினை கோவில் வாசலில் வைத்துவிட்டு தனது நேர்த்தி கடனை செலுத்தி விட்டதாக நினைத்து ரத்தவெள்ளத்தில் கிடந்தார். பின் அக்கம் பக்கத்தில் பார்த்த பொதுமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் முதலுதவி செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com