தனது மகளைவிட நன்றாக படித்த மாணவனுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
காரைக்கால் நேரு நகரை சேர்ந்த பால மணிகண்டன் என்ற சிறுவன் அப்பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று அப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சிக்காக காலையில் மாணவன் சென்றிருக்கிறான். மதியம் வீடு திரும்பிய சிறுவனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பெற்றோர் விசாரித்தபோது பள்ளியில் காவலாளி குளிர்பானம் கொடுத்ததாகவும் அதை சாப்பிட்டதிலிருந்து வாந்தி வருவதாகவும் தெரிவித்துள்ளான். உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவனை பெற்றோர்கள் சேர்த்துள்ளனர்.
விசாரித்ததில், சிறுவனிடம் கொடுக்கச்சொல்லி பள்ளி காவலாளியிடம் அதே வகுப்பில் படிக்கும் சக மாணவியின் தாய் சகாய ராணி விக்டோரியா என்பவர் குளிர்பானம் கொடுத்துச் சென்றது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது தனது மகளைவிட சிறுவன் நன்றாக படித்ததால் சிறுவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்ததை ஒத்துக்கொண்டார். இதனிடையே காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாணவன் பாலமணிகண்டன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இது குறித்து தகவலறிந்து மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவனுக்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை எனக்கூறி மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினர்.
உயிரிழந்த மாணவனின் உடல் உடற்கூறாய்விற்காக பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் மாணவியின் தாயார் சகாய ராணி விக்டோரியா மீது திட்டமிட்டு கொலை செய்தல் வழக்கில் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து புதுச்சேரி காலாப்பேட் மத்திய சிறைச்சாலைக்கு போலீசார் கொண்டு செல்கின்றனர்.