திண்டுக்கல் அருகே கடத்திச் செல்லப்பட்ட கணவனை மீட்டுதரக் கோரி மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் அடுத்துள்ள வேடபட்டியைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி ராஜ். இவருக்கும் இவர் மனைவிக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் - மனைவி இரண்டு பேரும் திண்டுக்கல் அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியில் சேசு சந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமான செங்கல்சூளையில் முன்பணமாக ரூ.1 லட்சம் பெற்றுக் கொண்டு வேலை பார்த்து வந்துள்ளனர்.
இதையடுத்து அங்கிருந்து வேலையை விட்டுவிட்டு பாதியிலேயே வெளியேறி திண்டுக்கல் அருகே உள்ள முன்னிலைகோட்டையைச் சேர்ந்த சின்னப்பர் சந்தியாகு என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் முன்பணமாக பெற்றுக்கொண்டு வேலை பார்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்தும் பாதியிலேயே வேலையை விட்டுவிட்டு வெளியேறி உள்ளனர். இரண்டு செங்கல் சூலையிலும் வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் இருந்த நிலையில், கடந்த ஜனவரி 18 ஆம் தேதி கல்லுப்பட்டி என்ற இடத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வேளாங்கண்ணி ராஜ் கடத்தப்பட்டார்.
இது தொடர்பாக மனைவி குழந்தை தெரஸ், அம்பாத்துரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து கடத்தப்பட்டு 25 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை வேளாங்கண்ணி ராஜ் கண்டு பிடிக்கப்படவில்லை. இதனால் மனம் உடைந்த குழந்தை தெரஸ் இன்று 13.02.23 தனது மகன் மகளுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு தான் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி மூன்று பேரும் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அவர்களை காப்பாற்றினர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.