பழனி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்த தவறால் பெண் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பழனியை அடுத்த புது ஆயக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பொன்மலர். இவர் கடந்த 22ஆம் தேதி காலில் முறிவு ஏற்பட்டு பழனி அரசு மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார். அன்றிலிருந்து பொன்மலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கின்றனர். இதனை அடுத்து நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. சுயநினைவுடன் சென்ற பொன்மலர் அறுவை சிகிச்சைக்கு பிறகு இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொன்மலரின் உறவினர்கள் மருத்துவர்களின் தவறான சிகிச்சையே இறப்புக்கு காரணம் என கூறி மருத்துவமனை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொன்மலரின் உடலை வேறு மாவட்ட மருத்துவர்கள் உடற்கூறு பரிசோதனை செய்வார்கள் என உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.