சென்னையிலிருந்து பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசத்தை ஒட்டி, சுற்றுலா சென்று வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 22 பேர் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாக்கு சென்று விட்டு, மீண்டும் சென்னை அடையாறு நோக்கி முருகனை தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் பகுதியில் அதிகாலை 5 மணி அளவில் வந்து கொண்டிருந்த போது, ஓட்டுநர் ராஜேஷின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர தடுப்பு கட்டையில் மோதி தலை குப்புற கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த ஏழு பெருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த விக்கிரவாண்டி காவல்துறையினர், கவிழ்ந்த வேனை கிரேன் மூலம் அகற்றினர். இதனால் விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலை 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்து குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.